ட்ரெண்டிங்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

தமிழகம் முழுவதும் வாரந்தோறும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நாளில் பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம். அதனை பரிசீலிக்கும் மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்டத் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பார். அதனை தொடர்ந்து மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வுக் காண்பர். 

அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 28) காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியோர் மனு கொடுப்பதற்காக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

அப்போது, கார்த்திக்  தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட காவல்துறையினர், அவரை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலைப் பிடுங்கி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 


அதைத் தொடர்ந்து, கார்த்திக்கின் சகோதரிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், "நாங்கள் 3 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, அக்கம் பக்கத்தினர் எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளனர். 

இதனிடையே கார்த்திக்கிற்கு அறிவுரைக் கூறி அவரை காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.