சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நவம்பர் 04, 05, 18, 19 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2024- ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் அக்டோபர் 27- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27- ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 1,249 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நவம்பர் 04- ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் நவம்பர் 05- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், அதனைத்தொடர்ந்து, நவம்பர் 18- ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் நவம்பர் 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 3,257 வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.
ஜனவரி 01- ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்கள், (அதாவது 31.12.2005 முன்னர் வரை பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ம், குடியிருப்பை மாற்றியதற்கும். நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் குறிப்பதற்கும் படிவம் 8- ஐ பயன்படுத்த வேண்டும்.
மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்தத்தில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் (அதாவது 30/09/2006 வரை பிறந்தவர்கள்) 01/04/2024, 01/07/2024 மற்றும் 01/10/2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6- ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், "Voter helpline" என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவினை உறுதி செய்ய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மேற்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 09- ஆம் தேதி வரை பெறப்பட்டு, ஜனவரி 05- ஆம் தேதி வரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்." இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)