சேலம் மாநகரில் அமைந்துள்ள மிகவும் பழமையான மற்றும் பிரசித்திப் பெற்ற கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று (அக்.27) காலை 08.00 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. கோயில் கோபுரங்கள் மீது வீற்றிருக்கும் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
தப்பாட்டம், பம்பை, மேள தாளங்கள் ஒருபுறம் முழங்க, கோயிலின் ராஜகோபுரத்திற்கு ட்ரோன் மூலம் மலர் தூவப்பட்ட நிலையில், பக்தர்கள் முழக்கங்களை எழுப்பி வழிபாடு நடத்தினர். விழாவில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, சேலம் மாநகர மக்கள் மட்டுமின்றி, எடப்பாடி, ஓமலூர், வாழப்பாடி, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, மல்லூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனைத் தரிசித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோயிலுக்கு அருகில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


