சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறையின் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் ராணுவ வீரரிடம் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பா.ஜ.க. நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள சாம்ராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகனுக்கு மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித்துறையின் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பா.ஜ.க. நிர்வாகி கமலகண்ணன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.
இதனை நம்பிய ராஜு பல தவணைகளாக 35 லட்சம் ரூபாய் வரை கமலகண்ணனுக்கு பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, பணிக்கான ஆணையையும் கமலகண்ணன், ராஜுவிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த பணி ஆணை போலியானது என்பது தெரிய வந்த நிலையில், பணம் வாங்கிக் கொண்டு தங்களை ஏமாற்றியதாக ராஜு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த கமலகண்ணன் மீது மோசடி உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து கைது செய்தனர்.



-hcTFAGMRGb.jpg)