சேலம் மாவட்டத்தில் வரும் நவம்பர் 22-ஆம் தேதி முதல் டிசம்பர் 3- ஆம் தேதி வரை 12 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்றும் இந்த ஆண்டு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா-2023 வருகின்ற நவம்பர் 22- ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்கி டிசம்பர் 03- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 12 நாட்கள் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது.
சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறவும், கலை மற்றும் இலக்கியம் நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், மாணவர்களுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளார்களின் படைப்புகளைக் கொண்ட விற்பனையகங்கள் அமைத்திடவும், அறிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும், வாசிப்பு அரங்கங்கள், பர்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நூல் விற்பனையகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைத்திடவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை. அதிகரிக்கும் வகையில் அரங்குகளில் சேலம் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி அப்படைப்புகள் சார்ந்த உரையாடல் நடைபெறும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. சேலத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் புத்தகக் கண்காட்சியில் புத்தக ஆர்வலரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையிலான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)