அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகளுடன் சந்திரயான்- 3 குறித்த வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.
நவராத்தியை முன்னிட்டு, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சித் தொடங்கப்பட்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வடிவிலான கடவுள் சிலைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், தமிழகத்தில் முக்கிய கோயில்களின் வெளித் தோற்றமும் பொம்மைகளாக உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல், மேட்டூர் அணையின் வடிவமும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், சந்திராயன் 3 விண்கலம், நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய வடிவமைப்புகளை இடம் பெற்றுள்ளன.
அத்துடன், கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


