ட்ரெண்டிங்

குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்! 

சேலம் மாவட்டத்தில் ஒருமாத காலம் நடைபெறவுள்ள குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமினை இன்று (ஜூலை 01) குமாரசாமிப்பட்டி, அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி மற்றும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் இன்றைய தினம் (ஜூலை 01) தொடங்கி வருகின்ற ஜூலை 31- ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறவுள்ள குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறவுள்ளது.

5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பிற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்றுப்போக்கினால் ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்படும். வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும். இந்நீர்சத்து குறைபாட்டினை தடுக்க ORS (உப்புநீர் கரைசல்) எனும் உயிர்காக்கும் அமுதம் அளிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். வயிற்றுப் போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் இத்தகைய ஒருமாத
காலம் முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமானது அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் ORS பகுதி அமைக்கப்படும் மற்றும் ORS உப்பு நீர் கரைசல் தயாரிப்பது, கை கழுவும் முறை, பிரத்யேக தாய் பால் அளிக்கும் முறை, இணை உணவு வழங்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஐந்து வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று ORS எனப்படும் உப்புநீர் கரைசல் தூள் பாக்கெட்டுகள் மற்றும் 14 நாட்களுக்கான துத்தநாக மாத்திரைகளை (Zinc Tablet) இலவசமாக வழங்கி வயிற்றுப்போக்கின் போது அதனை உபயோகிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.

வைட்டமின் A உயிர்ச்சத்து நமது உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாகும். இச்சத்து ஆரோக்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிப்பதுடன், நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல்,
திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாக அமைந்துள்ளது. மேலும், வைட்டமின் A உயிர்ச்சத்து பெரும்பாலான மஞ்சள் நிற கனிகளான மாம்பழம், பப்பாளி, கேரட், தக்காளி, பச்சைக் கீரை வகைகள் மற்றும் பால், மாமிச உணவுகளான மீன் மற்றும் முட்டையில் அதிகமாக காணப்படுகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு தேசிய அளவில் 6 மாதங்களுக்கு ஒரு முறை வைட்டமின் A திரவம் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் முகாம்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் துறைகளைச் சார்ந்த 3.118 பணியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். இம்முகாமினை மேற்பார்வையிட 459 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமின் மூலம் 2,81,592 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளும் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் முகாமின் மூலம் 2,62,674 குழந்தைகளும் பயன்பெற உள்ளனர். ஆகையால் பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தும் ORS எனும் உயிர்காக்கும் அமுதம் மற்றும் துத்தநாக மாத்திரையின் (Zinc Tablet) பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பெற்று தங்களது குழந்தைகளை வயிற்றுப் போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்தார்.

இம்முகாமில், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், யோகானந்த், மாநகர நல அலுவலர் மோகன், மாமன்ற உறுப்பினர் சங்கீதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.