குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நிலத்தடி நீர் பாதுகாத்திட மழை பெய்கின்ற பொழுது, அனைவரும் மழைநீரை சேகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி, பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, சேலம் மாநகராட்சி அலுவலக சாலை, அரசு மருத்துவமனை வழியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவுப் பெற்றது. இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த பதாகைகள் ஏந்தியவாறு 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரதான சாலையில் நடந்து சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


