சேலம் நான்கு ரோடு குழந்தை இயேசு பேராலயம் அருகில் உள்ள ஏ.எம் பிரியாணி சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று நள்ளிரவு வரை பிரியாணி விற்பனை நடந்துள்ளது. கடையை மூடிவிட்டு ஊழியர்கள் தங்களின் தங்குமிடங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) அதிகாலை 03.00 மணியளவில் ஹோட்டலுக்குள் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக அங்கிருந்த 2 சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் பிடித்துள்ளது. சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், தீ விபத்து குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையம், செவ்வாப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும், உணவகத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகின. எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


