ட்ரெண்டிங்

நீதிமன்ற ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை!

 

சேலம் மாவட்டம், காமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் ஈஸ்வரன் (வயது 58). இவர் சேலம் நீதிமன்றத்தில் காவலாளியாகப் பணியில் சேர்ந்து பின்னர் அலுவலக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, அடுத்த நிலை பதவி உயர்வுக்காக 8-ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அந்த சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், ஈஸ்வரனை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அதைத் தொடர்ந்து, ஈஸ்வரன் பதவியிறக்கம் செய்யப்பட்டு, ஓமலூர் நீதிமன்றத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.

 

இது தொடர்பான வழக்கு, சேலம் மூன்றாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி தங்க கார்த்திகா, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஈஸ்வரனுக்கு சுமார் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.