சேலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் மது பிரியர்கள் அதிக அளவில் திரண்டனர்.
காலி மதுபாட்டில்களை வெளி முகமை மூலம் திரும்பப் பெற வேண்டும், கடைகளில் உடையும் பாட்டில்களுக்கு நிர்வாகமே இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் மது பிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் அமைச்சர் மற்றும் மாவட்ட மேலாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து சேலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்தது.
குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
மது பிரியர்கள் சிலர் கூறுகையில்,“கடந்த மூன்று நாட்களாக கடைகள் மூடப்பட்டதால் பெரும் அவதி ஏற்பட்டது எனவும் தற்போது கூடுதலாக பணம் வாங்காமல் எம்ஆர்பி விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. என தெரிவித்தனர்,தேவையெனில் கூடுதல் தொகை கொடுக்க கூட தயார் என்றும் கடைகளை மட்டும் மூட வேண்டாம்” என்று தெரிவித்தனர்.


