ட்ரெண்டிங்

சோனா தொழில்நுட்ப கல்லூரியில் கல்விக்கடன் மேளா!

மாணவர்கள் கல்விக் கடன் பெற நேரடியாக நாளை (அக்.15) மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் கல்விக் கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை (அக்.15) ஞாயிற்றுக்கிழமை அன்று சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளைய தினம் நடைபெறவுள்ள கல்விக் கடன் மேளாவில் ஏற்கனவே கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக கல்விக் கடன் தேவைப்படுபவர்கள் நேரடியாக இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இம்முகாமில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும். முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ. மாணவியர்களும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், மேற்குறிப்பிடப்பட்ட கல்விக்கடன்களை பெற விரும்பும் மாணவ, மாணவியர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல் ஆகிய ஆவணங்களை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க ஏதுவாக கொண்டு வரவேண்டும்.

 

நாளை நடை பெறவுள்ள இக்கல்விக் கடன் மேளாவில சேலம் மாவட்டத்தில் உள்ள 47 வங்கிகள் மற்றும் இதன் 503 வங்கி கிளைகள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்கள் வழங்கும் கல்விக் கடன் விண்ணப்பத்தினை உடனடியாக பரிசீலித்து கடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.