ட்ரெண்டிங்

நீரின்றி பாலைவனம் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை!

அகண்ட காவிரி நடப்பாண்டில் வறண்டதால் சிற்றோடையின் குட்டைகளாகக் காட்சியளிக்கிறது மேட்டூர் அணை.

 

தமிழர்களின் பல தலைமுறைகள் வாழ 90 ஆண்டுக்கால ஆய்வுக்கு பிறகு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான மேட்டூர் அணை தண்ணீரின்றிப் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. தென்மேற்கு பருவமழை காலம் தவறியதால், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு, இதனால் வரை 125 டி.எம்.சி.க்கு பதிலாக 46 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு 92 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 30 அடியாகச் சரிந்தது. மேட்டூர் அணை 120 அடி உயரமும், 93.47 டி.எம்.சி. கொள்ளளவுக் கொண்ட அதன் நீர் தேக்கப் பகுதி, 59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, ஏழு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட அகண்ட காவிரி தற்போது சிற்றோடையாகவும், குட்டைகளாகவும் மாறியுள்ளது.

 

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 90 ஆண்டுகளில் 1982- ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு காலமான அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 12 அடியாகக் குறைந்தது போல், 41 ஆண்டுகளுக்கு பிறகு நீர்மட்டம் 30 அடிக்கு கீழ் சரிந்து டெல்டா மாவட்ட விவசாயத்தை முடக்கியுள்ளது.

 

இதனால் நீர் தேக்கப் பகுதியில் தண்ணீரில் மறைந்திருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம், நந்தி சிலை, மன்னர் காலத்துக் கோட்டை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்துவ ஆலயம் ஆகியவை வெளிப்பட்டுள்ளன. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் 7,900 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இது குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.