ட்ரெண்டிங்

தொழிற்சாலையில் இரும்புக் கம்பிகளை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

சேலம் மாவட்டம், குரங்குச்சாவடிப் பகுதியைச் சேர்ந்த சக்தி (வயது 39) என்பவர் கருப்பூரில் உள்ள மகளிர் தொழில் பூங்காவில் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவருடைய தொழிற்சாலையில் 200 கிலோ இரும்புக் கம்பிகள், 50 கிலோ பழைய கம்பிகள் மற்றும் இரண்டு சைக்கிள்கள் காணாமல் போகியுள்ளது. 

இவை அனைத்தும் ஒரேநாளில் திருடு போக வாய்ப்பில்லை, சிறுக, சிறுக நள்ளிரவில் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று எண்ணிய தொழிற்சாலையின் உரிமையாளர் சக்தி, திருடுப் போனது குறித்து கருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், கருப்பூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மனோன்மணி தலைமையிலான காவல்துறையினர் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியே சென்றுக் கொண்டிருந்த, இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், கருப்பூர் மகளிர் தொழில் பூங்காவில் இருந்து இரும்புக் கம்பிகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். 

அதைத் தொடர்ந்து, அவர்களை கருப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், முகேஷ் (வயது 24), 17 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள், 18 வயதுடைய சிறுவன் என நான்கு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் திருடப்பட்ட இரும்புகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அதனை மீட்பது குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.