ட்ரெண்டிங்

வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ராஜேந்திரன் எம்.எல்.ஏ!

சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தி.மு.க.வின்  சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன் தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 10) தனது தொகுதிக்கு உட்பட்ட 35, 36 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

இந்த நிகழ்வின் போது, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அம்மாப்பேட்டை மண்டலக்குழு தலைவர் தனசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.