சேலம் மாவட்டத்தில் மூன்று அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மாநில அளவில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின் சார்பில், மாநிலம் முழுவதும் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கற்பித்தல் தரம், கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வி முன்னேற்றம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, சமூக பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த முயற்சியின் நோக்கம், பள்ளிகளுக்குள் ஆரோக்கியமான போட்டி உணர்வை உருவாக்கி, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் பணியில் ஊக்கமளிப்பதாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பே தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித் துறை அதிகாரிகள், கல்வி நிபுணர்கள், மற்றும் சமூக பிரதிநிதிகள் அடங்கிய தேர்வு குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள பள்ளிகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கினர்.
தற்போது தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட பட்டியலின் படி, மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலிருந்து தலா மூன்று பள்ளிகள், மொத்தம் 114 பள்ளிகள் “சிறந்த பள்ளிகள்” பட்டியலில் இடம் பெற்றுள்ளன.அவற்றில் சேலம் மாவட்டம் சார்பில் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன:எடப்பாடி ஒன்றியம் – மணியக்காரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,சேலம் ஊரக ஒன்றியம் – கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,அயோத்தியபட்டினம் ஒன்றியம் – பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
இந்த மூன்று பள்ளிகளும், மாணவர் சேர்க்கை வளர்ச்சி, ஆசிரியர்களின் கற்பித்தல் தரம், பள்ளி கட்டமைப்பு மேம்பாடு, மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் கல்வி முன்னேற்றம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளுக்கு மாநில அளவில் சிறந்த பள்ளி கேடயம் வழங்கும் விழா, வரும் நவம்பர் 14ஆம் தேதி (குழந்தைகள் தினம்) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,உயர்நிலை கல்வி அதிகாரிகள்,மற்றும் பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு சிறந்த பள்ளிகளை பாராட்டவுள்ளனர்.
இச்சாதனை,சேலம் மாவட்டத்தின் கல்வி தரம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்த உழைப்பை வெளிப்படுத்துவதாக கல்வி வட்டாரங்கள் பெருமிதம் தெரிவித்துள்ளன.

-vHyYf2cukP.jpg )
-SXgDfGgJfO.jpg)