ட்ரெண்டிங்

ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காலை 06.30 மணிக்கு ஹுப்ளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில், மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 09.00 மணிக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில், மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹுப்ளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

 

ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 07355) அக்டோபர் 07- ஆம் தேதி முதல் டிசம்பர் 30- ஆம் தேதி வரையும், ராமேஸ்வரம்- ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரயில் சேவை (ரயில் எண் 07356) அக்டோபர் 08- ஆம் தேதி முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரையும் இயக்கப்படும்.

 

இந்த ரயில்கள் மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்; அந்த ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.