ட்ரெண்டிங்

அண்ணாமலை உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்துள்ளார்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

சேலம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (செப்.14) காலை 08.00 மணிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, கோட்டை மாரியம்மனை தரிசித்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழுத் தலைவர் முருகன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. ஆட்சிப் பற்றி குறைச் சொல்வதற்கு, எந்த பொருளும் கிடைக்கவில்லை. கையில் எதுவும் கிடைக்காததால் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரலாறுகளை உளறி வருகிறார். உடன்கட்டை ஏறுதல் என்பது கற்புக்காக தான் என்று அண்ணாமலை குழம்பி போய் கூறி வருகிறார்.

 

தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, அண்ணாமலை புரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறார். ஏதாவது ஒரு பிரச்சினை கையில் எடுக்க வேண்டும் என்பதற்காக உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்துள்ளார்.

 

தி.மு.க.வைப் பொருத்தவரை சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை. சனாதனத்தில் உள்ள சில கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம். தி.மு.க. சமத்துவ ஆட்சி சமத்துவத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறோம். சமத்துவத்தை வலியுறுத்துகின்ற கடமை உறுதி தி.மு.க.விற்கு தான் இருக்கிறது.

 

இந்து சமயத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பெரிய மாற்றத்தை தமிழக முதலமைச்சர் உருவாக்கிக் காட்டியுள்ளார். இதனால் தமிழக முதல்வரை இறையன்பர்களும், பக்திமான்களும் போற்றிப் பாராட்டி வருகின்றனர்.

 

சனாதனதை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை அதில் உள்ள கோட்பாடுகளான பெண் கல்வி மறுப்பு, கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி உள்ளிட்ட கோட்பாடுகள் தான் எதிர்க்கிறோம், மக்களிடையே உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இருத்தல் கூடாது உள்ளிட்டவைகள் சனாதனத்தில் குறிப்பிட்டுள்ளதால், இதுதான் எதிர்க்கிறோம். சனாதனதை ஏற்றுக் கொண்ட அனைவரையும் எதிர்க்கவில்லை.

 

இறை நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். அதில் தி.மு.க. தலையிட்டது கிடையாது. ஆண்டவனை வழிபடுபவர்களையும், வழிபடாதவர்களையும் ஏற்றுக் கொள்வோம். சமத்துவத்தின் ஒரு அங்கம் தான் தி.மு.க. என்பதை அண்ணாமலைக்கு தெரிவிக்க வேண்டும்,என தெரிவித்துள்ளார்.