ட்ரெண்டிங்

பா.ஜ.க.வின் மாநில தலைவரை மாற்ற அ.தி.மு.க. எந்த கோரிக்கையும் வைக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி பேட்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் இன்று (அக்.04) காலை 10.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கட்டப்பட்டக் கட்டிடங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அத்துடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி,பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறைத் துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகிய தேசியத் தலைவர்கள் யாரும் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் பேசவில்லை. பாரதிய ஜனதா தேசியத் தலைவர்கள், அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளைக் கேட்டதாக பத்திரிக்கைகளில் வரும் தகவல்கள் தவறானவை. அப்படி ஏதும் நடக்கவில்லை. அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதேபோல், பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை.

 

தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அ.தி.மு.க. தொண்டர்களின் மனதைக் காயப்படுத்தி விட்டது. களத்தில் நின்று வெற்றிக்காக பணியாற்றப் போவது தொண்டர்கள்தான். அவர்களால் தான் ஒரு கட்சி வெற்றி பெற முடியும். தொண்டர்களின் உணர்வை கடந்த செப்டம்பர் 25- ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளது. இது அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் சேர்ந்து எடுத்து முடிவின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். இதில் இடம்பெறும் கட்சிகள் குறித்து விரைவில் தெரிவிப்போம் எனத் தெரிவித்தார்.