ட்ரெண்டிங்

டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி, சங்ககிரி, ஏற்காடு உள்ளிட்டப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏற்காடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக, டேனிஷ்பேட்டை ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, டேனிஷ்பேட்டை ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், கோட்டேரிக்கு செல்கிறது.

 

கோட்டேரியும் நிரம்பும் தருவாயில் இருக்கிறது. டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், டேனிஷ்பேட்டை மற்றும் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

 

கடந்த 2022- ஆம் ஆண்டு ஜுலை மாதத்திலேயே டேனிஷ்பேட்டை மற்றும் கோட்டேரி ஆகிய ஏரிகள் நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது.