ட்ரெண்டிங்

சேலம் மக்களே பறக்கத் தயாரா?- வெளியானது விமான நேரப் பட்டியல்!

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில், சேலம் விமான நிலையத்தை உதான் 5.0 திட்டத்தின் கீழ் இணைத்துள்ளது.

 

அதன்படி, வரும் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் கொச்சின்- சேலம்- கொச்சின், பெங்களூரு- சேலம்- பெங்களூரு ஆகிய வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கவுள்ளது. இந்த நிலையில் விமான நேரப்பட்டியல் வெளியாகியுள்ளது.

 

வாரத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடத்தில் விமான நிறுவனம் விமான சேவையை வழங்கவுள்ளது.

 

அந்த வகையில், நண்பகல் 12.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 01.40 மணிக்கு சேலம் விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல், மாலை 05.15 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் விமானம் மாலை 06.15 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும்.

 

சேலத்தில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 03.15 மணிக்கு கொச்சின் விமான நிலையத்தைச் சென்றடையும். கொச்சினில் இருந்து பிற்பகல் 03.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 04.50 மணிக்கு சேலம் விமான நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் சேலத்தில் இருந்து பெங்களூரு வழியாக ஹைதராபாத்திற்கும், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு வழியாக சேலத்திற்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கவுள்ளது.