சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம். இ.ஆ.ப. தலைமையில் இன்று (செப்.22) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்ததாவது, "தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்திச் செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக, இக்கூட்டத்தில் விவசாயிகள் பட்டா மாறுதல் காலதாமதமின்றிக் கிடைத்திடவும், விவசாய நிலங்களில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சரிசெய்து தரவேண்டுமெனவும், உழவர் சந்தைகளில் இ-நாம் விற்பனையினை முறைபடுத்திட வேண்டுமெனவும், மாமிசம் மற்றும் இறைச்சி வெட்டும் இடங்களை முறைப்படுத்த வேண்டுமெனவும், உரம் மற்றும் பூச்சி மருந்துக் கடைகளில் விற்பனையை முறைபடுத்திட வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 160 மனுக்கள் நேரடியாகவும், இங்கு விவசாயிகளால் வழங்கப்பட்டுள்ளது.
உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையைப் பொறுத்தவரையில் கடந்த ஆகஸ்ட் 30- ஆம் தேதி முதல் செப்டம்பர் 07- ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள வேளாண் இடுபொருட்கள் விற்பனை நிலையங்களில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநரின் தலைமையில் திடீர் ஆய்வுகள் நடத்த உத்தரவிட்டிருந்தேன், அதனடிப்படையில் நடைபெற்ற ஆய்வுகளின்போது 495 விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 22 கடைகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டும், 23 கடைகளில் முறையாக இருப்பு பராமரிக்காமை, 38 கடைகளில் பதிவேடுகள் முறைப்படுத்தாமை, 3 கடைகளில் விற்பனைப் பட்டியல் வழங்காமை மற்றும் 7 கடைகள் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்காதவர்கள் மீது உரக் கட்டுப்பாடு மற்றும் பூச்சி மருந்துகள் சட்டங்களை மீறியமைக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 2,441 மெட்ரிக் டன்னும், டிஏபி 5,147 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2,535 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,058 மெட்ரி டன்னும், காம்ப்ளக்ஸ் 16,522 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 27,702 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உரத்தேவை மற்றும் வழங்க நிகழ்வுகளை தொடர் கண்காணிப்பு செய்வதால் உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காலதாமதமின்றி பட்டா மாறுதல் செய்வதற்கு தற்போது மாவட்டத்தில் 160 நில அளவையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், வாரந்தோறும் அரசுச் செயலாளர் அவர்கள் நிலையில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல்களின் விவரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொலிக்காட்சியின் வாயிலாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்டா மாறுதலை விரைவாக ஆய்வு செய்து வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின் கம்பங்களை விபத்துக்கள் ஏற்படாத வகையில் உடனுக்குடன் சரி செய்திட மின்சாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் அனைத்துக் கோட்டங்களிலும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பத்திரிக்கைச் செய்தியின் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிறது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பயனடையலாம்.
உழவர் சந்தை வாயிலாக விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தங்கள் விலை பொருட்களுக்கு அதிக லாபம் பெரும் வகையிலும், பொதுமக்களும் பசுமையான காய், கனிகளைக் குறைந்த விலைக்கு வாங்கிப் பயனடைந்து வருகின்றனர். இதில் இ-நாம் விற்பனையை முறைப்படுத்த வேண்டுமென வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் இறைச்சி கழிவுகளைக் கொட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்த்திடவும், சுகாதாரமான இறைச்சி பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதை உறுதிசெய்திடவும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், உணவுப் பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறையினருடன் இணைந்து முறைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காலதாமதமாக பெய்துவரும் நிலையில் வடகிழக்கு பருவமழை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பெய்யும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் தயாராக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ ஆகும். செப்டம்பர் மாதம் முடிய பெய்ய வேண்டிய இயல்பான மழையளவு 627.4 மி.மீ ஆகும், நடப்பு ஆண்டு செப்டம்பர் 21- ஆம் தேதி வரை 588.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை அரசு அலுவலர்களைக் கொண்டு மாதந்தோறும் நடத்தப்படுகின்ற இத்தகைய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை உரிய முறையில் விவசாயிகள் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ இ.ஆ.ப., வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் சாந்தி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


