ட்ரெண்டிங்

சுகாதாரமற்ற முறையில் உணவகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்!

சுகாதாரச் செயலாளர் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் ஆகியோரின் உத்தரவுப்படி, இன்று (செப்.20) சேலம் மாவட்டம், ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், தலைவாசல் மற்றும் சேலம் மாநகராட்சியில் ஏவிஆர் ரவுண்டானா, சீலிநாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.கதிரவன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, சுமார் 54 உணவகங்களில் ஆய்வு செய்தனர்.

 

ஆய்வின் போது, 18 உணவகங்களில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பழைய மற்றும் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கோழி இறைச்சி, 21 கிலோ ப்ரைடு சாதம், செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட 10 கிலோ கோழி பிரியாணி, 5.3 கிலோ மயோனைஸ், 800 கிராம் செயற்கை நிறமூட்டிகள், 8 கிலோ மசாலா, 4 கிலோ தடைச் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் என மொத்தமாக 249.100 கிலோ கிராம் படிவம் 2 வழங்கிய பின் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.

 

அவற்றில் 15 உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று உணவு நிறுவனங்களுக்கு ரூபாய் 6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்; உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி மீறல்கள் கண்டறியப்படும் உணவு நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி கடுமையான மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.