தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, கட்சியின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி, எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன்,என்று குறிப்பிட்டுள்ளார்.


