சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறவும் முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகிறது.
அதன்படி, புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவர்களுடன் காலியாக உள்ள 6 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் சேலம் ஊரக வளர்ச்சித்துறையின் மதி திட்டம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிமாகப் பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவக் கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் மே 22- ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு பொது மேலாளர், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், சித்தனூர், தளவாய்பட்டி (அஞ்சல்), சேலம் மாவட்டம்- 636302 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


