பண மோசடி புகாரில் சிக்கிய நிதி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர்களைச் சுற்றி வளைத்து பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த ஸ்ரீஷா, சண்முகா டிரேடர்ஸ் பெயரில் நிதி நிறுவனம் நடத்தியுள்ளார். மேலும், இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி, பெண்கள் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். ஆனால் கூறியவாறு பணத்தைத் திரும்பத் தராததால், பாதிக்கப்பட்ட பெண்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து விசாரணையையும் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், நிதி நிறுவன அலுவலகத்தைக் காலிச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்கள், சம்மந்தப்பட்ட நிதி நிறுவன பெண் ஊழியர்களைச் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர், நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
மோசடி புகாரில் சிக்கிய ஸ்ரீஷா என்பவரை விசாரணைக்கு பலமுறை அழைத்தும் வரவில்லை என பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கூறுகின்றனர்.


