ட்ரெண்டிங்

வாக்கு எண்ணும் பணியில் 3,000 பேர்! 

சேலம் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நாளை (ஜூன் 04) நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆகியோர் இன்று (ஜூன் 03) நேரில் பார்வையிட்டு ஆய்வு கொண்டனர்.

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று முடிவுற்றதைத் தொடர்ந்து, சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு. வீரபாண்டி, எடப்பாடி மற்றும் ஓமலூர் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை செவ்வாய்க்கிழமை கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். மேலும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கென 6 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 18 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 25 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

குறிப்பாக, வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து இடங்களிலும் 314 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தேர்தல் பொதுப்பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 1,500 காவல் துறையினர் மற்றும் 1,500 அரசு அலுவலர்கள் என மொத்தம் 3,000 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.

மக்களவைப் பொதுததேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணுமிடம் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்றையதினம் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஜி.பி. பாட்டீல் இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக, வாக்கும் எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்வதற்கான வழி, தடையில்லா மின்சார வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் பி.விஜயகுமாரி இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா இ.கா.ப.. மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.