ட்ரெண்டிங்

சேலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து வெளியான புதிய தகவல்!

திருச்சி, நெல்லை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இ.ஆ.ப., சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் சமர்ப்பித்தார். 

அந்த சாத்தியக்கூறு அறிக்கையில், சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாபட்டணம் ரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக நாழிகல்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.18 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அடுத்த 30 ஆண்டுக்கால மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரிதப் போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையில் மாற்றம் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.