சேலம் குரங்குச்சாவடி ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!
கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான விரதத்தைத் தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக, சேலம் குரங்குச்சாவடியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து குருசாமிகள் மூலம் துளசி மாலை அணிந்து கொண்டனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாலை அணிந்து ஒரு மண்டல விரதத்தைத் தொடங்கினர். குறிப்பாக, முதல் முறையாக மாலை அணியும் கன்னிசாமிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது.
அப்போது, பக்தர்கள் எழுப்பிய சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் கோயில் வளாகம் முழுவதும் எதிரொலித்தது. தொடர்ந்து ஐயப்பனை வழிபட்ட பக்தர்கள்,சபரிமலை யாத்திரைக்கான விரதத்தை பக்தி பரவசத்துடன் தொடங்கினர்.



-hcTFAGMRGb.jpg)