அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்!
45 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் – டிசம்பர் 4-ல் முதல்வரை சந்தித்து முறையிட திட்டம்.
சேலம்:
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் 16 முதல் 27-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 11 மையங்களில் இருந்து இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிடுவதுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களை முற்றிலும் தவிர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலமாகவே புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொள்ளும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டும், அலுவலக நேரம் முடிந்த பிறகு ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும், பெண் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற்றுத் தர வேண்டும், அரசு அலுவலகங்களில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவித்தார்.
அரசு உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் மட்டும் அரசு செயல்படாமல், சுயமாக முடிவெடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ம் தேதி சென்னையில் மாபெரும் பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து முறையிட உள்ளதாகவும் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பு. சுரேஷ், மாவட்டத் தலைவர் பி.வெ. அர்த்தனாரி, மாவட்டப் பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



-hcTFAGMRGb.jpg)