ட்ரெண்டிங்

சேலம் – கரூர் இரட்டை ரயில் பாதைக்கு ரூ.2,241 கோடி ஒதுக்கீடு!

 

சேலம் – கரூர் இரட்டை ரயில் பாதைக்கு ரூ.2,241 கோடி ஒதுக்கீடு: பிரதமருக்கு கே.பி.ராமலிங்கம் நன்றி!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, பாஜக மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லாலை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் – கரூர் ரயில் பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றுவதற்கு ரூ.2,241 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சேலம், நாமக்கல் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து மேம்படுவதுடன், ரயில்களின் காத்திருப்பு நேரம் குறைந்து கூடுதல் ரயில்களை இயக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க சங்ககிரி துர்க்கை ரயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகக் கூறினார். சேலத்தில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை கரூர் வரை நீட்டிக்கவும், பகல் நேரத்தில் ஆத்தூர் வழியாகச் சென்னைக்கு புதிய ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

அதேபோல், சேலம் – புதுச்சேரி இடையே ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சரிடம் முன்வைக்க உள்ளதாகக் கூறினார்.

மேட்டூர் ரயில் நிலையப் பகுதியில் உள்ள சக்தி காளியம்மன் கோவில் வளாகம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ள விவகாரம் குறித்தும், சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.