சேலம், ஆக.15: சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரூ.23.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை வழக்கமான உற்சகாத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்றபடி, ஆயுதப்படை, தீயணைப்பு, ஊர்காவல் படையினர் மற்றும் என்சிசி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட மற்றும் மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஆட்சியர் கௌரவித்தார்.
சிறப்பாக பணியாற்றிய 96 காவலர்களுக்கு சான்றிதழ்:
பின்னர் மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 96 காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு பதக்கங்களை வழங்கினார்.
*536 அலுவலர்களுக்கு பாராட்டு நற்சான்று:*
தொடர்ந்து, வருவாய், ஊரக வளர்ச்சி, சுகாதாரத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பா பணிபுரியும் 536 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
*23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி* :இதையடுத்து, 9 துறைகளின் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.23.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். முன்னதாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
*மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சி:*
பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் அசத்தினர். குறிப்பாக, மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இயற்கை அழகு, நீர், நிலம், காற்று தொடர்பான நடனம் நிகழ்ச்சிகளையும், யோகா, கராத்தே மற்றும் சிலம்பம் சுற்றியும் அசத்தினர். இதே போல் , நெய்காரப்பட்டி வித்யாபாரதி பள்ளி மாணவர்கள் போதை இல்லாத இந்தியா என்ற தலைப்பிலும், வலசையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நெகிழி விழிப்புணர்வு குறித்து நடனமாடினர். விழாவில், 1,527 மாணவ, மாணவியர் 7 குழுக்களாக பங்கேற்று நடனமாடி அசத்தினர்.
விழாவில், மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ரவிக்குமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)