ட்ரெண்டிங்

சேலத்தில் தற்காலிக பேருந்து நிலையம்! அமைச்சர் ஆய்வு !

 

சேலத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னைக்குச் செல்ல 519 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சேலம்: ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறப்புப் பேருந்து நிலையத்தைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விடுமுறைக் காலத்தில் ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, பொதுமக்கள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுமுறை முடிந்து சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக இரண்டு நாட்களில் 519 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகக் கூறினார். தமிழகம் முழுவதும் வழக்கமான மற்றும் சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 9,191 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சேலத்தில் இருந்து சென்னைக்கு 60 தனியார் பேருந்துகளும் தற்காலிகமாக இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்காலிகப் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், தீபாவளி பண்டிகையின்போதும் இதே நடைமுறை தொடரப்படும் என்றார்.

இதற்கிடையே, ‘வெற்றி பயணம்’ திட்டத்தை ஆயுத பூஜைக்குப் பிறகு தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனத் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அனைத்தையும் அறிந்தே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.