ட்ரெண்டிங்

குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம்… பொதுமக்கள் எதிர்ப்பு!

 

சேலம்: ஆட்டையாம்பட்டி தம்பிதுரை வீதியில் குடியிருப்புப் பகுதியில் புதிதாகத் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தம்பிதுரை வீதிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ஏற்கெனவே இரண்டு தனியார் செல்போன் கோபுரங்கள் உள்ள நிலையில், மீண்டும் புதிய கோபுரம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புதிய கோபுரம் அமையவுள்ள இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அங்கன்வாடி மையம் இருப்பதாகவும், அருகில் மருத்துவமனை அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கோபுரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் ஏற்கெனவே கிணறு ஒன்று மூடப்பட்டுள்ளதாகவும், மண் பரிசோதனை தொடர்பான ஆவணங்கள் காட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே உள்ள செல்போன் கோபுரங்களால் மின்காந்தக் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுவதாகத் தாங்கள் அச்சமடைந்துள்ளதாகவும், அப்பகுதியில் இரண்டு முதல் நான்கு பேர் வரை புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, புதிய கோபுரம் அமைக்கும் பணிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.