ட்ரெண்டிங்

சேலத்தில் தவெக எம்.எல்.ஏ. மீது நிலம் கேட்டு மிரட்டியதாகப் புகார்!

 

சேலம்:-கழிவுநீர் கால்வாய் பணிகளைத் தடுத்து நிறுத்துவதாக புகார் – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க நில உரிமையாளர் கோரிக்கை

சேலம் மாநகராட்சி 8-வது கோட்டத்திற்குட்பட்ட மூக்கநேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் பல்வேறு பகுதிகளின் கழிவுநீரை முறையாக வெளியேற்றும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சிமெண்ட் ஸ்லாப் அமைப்பது தொடர்பாக சேலம் வடக்கு தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாருக்கும், பணியில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது, தன்னிடம் அனுமதி பெறாமல் சிமெண்ட் ஸ்லாப் அமைக்கக் கூடாது எனக் கூறி, பணிகளை உடைத்துவிடுவதாக சட்டமன்ற உறுப்பினர் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் நில உரிமையாளர்களில் ஒருவரான செந்தில்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் நிலவி வந்த கழிவுநீர் கால்வாய் மற்றும் உபரி நீர் வெளியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசின் அனுமதியுடன் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோளை ஏற்று, தங்களுக்குச் சொந்தமான நிலத்தை அரசுக்கு ஒப்படைத்து, 12 அடி அகலமும் 12 அடி உயரமும் கொண்ட கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தியின்போது அதிக அளவில் மக்கள் அப்பகுதிக்கு வருவார்கள் என்பதால், கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்ட் ஸ்லாப் அமைக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்பேரில் அப்பணியும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் பதவியேற்ற சில நாட்களிலேயே தங்களைத் தொடர்புகொண்டு, தனது தொகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் நடைபெறுவதால் பணம் தர வேண்டும் என வற்புறுத்தியதாகவும், பின்னர் தனது பங்குதாரர்கள் இருவர் அவரை நேரில் சந்தித்தபோது, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தைத் தருமாறு கேட்டதாகவும் செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்ததால், 5 ஆயிரம் சதுர அடி நிலமாவது வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், நிலம் தர மறுத்ததையடுத்து ஆய்வு என்ற பெயரில் அடிக்கடி வந்து பணிகளைத் தடுத்து நிறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், பணியாளர்களைச் சாதி ரீதியாகப் பேசி, ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள செந்தில்குமார், இதே நிலை நீடித்தால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசின் அனுமதியுடன் நடைபெறுவதாகக் கூறப்படும் பொதுமக்கள் நலன் சார்ந்த கால்வாய் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகாரால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பின் விளக்கமும், அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளும் வெளியாக வேண்டியுள்ளது.