ட்ரெண்டிங்

சேலம்-தீபாவளிக்காகத் தயாரான 600 கிலோ வெள்ளிப் கொள்ளை!

 

சேலம் பள்ளப்பட்டி அருகே முகமூடி அணிந்து காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை – காவலாளியைத் தாக்கிவிட்டு துணிகரம்!

சேலம்: சேலம் பள்ளப்பட்டி அருகே வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் குடோனில் புகுந்த மர்மக் கும்பல், சுமார் 600 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பள்ளப்பட்டி அருகேயுள்ள சினிமா நகர் பகுதியில், பாலசுப்ரமணியம் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக வெள்ளித் தொழில் செய்து வருகிறார். இங்கு வெள்ளிக் கட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து, வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண்கொடி உள்ளிட்ட பல்வேறு வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக சுமார் 600 கிலோ எடையிலான வெள்ளிப் பொருட்கள் குடோனில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. இக்குடோனில் வெங்கடேசன் என்பவர் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து காரில் வந்த மர்மக் கொள்ளைக் கும்பல், குடோனில் இருந்த காவலாளி வெங்கடேசனைத் தாக்கிவிட்டு, அங்கிருந்த 600 கிலோ வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துத் தகவலறிந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஏ.ஜி.பாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், விற்பனைக்காகத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சேலையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.