ட்ரெண்டிங்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து பரபரப்பு!

 

குடும்பப் பிரச்சினை, நில அபகரிப்பு, வங்கிக் கடன் தொல்லை எனப் பல்வேறு காரணங்களால் பெண், மூதாட்டி உட்பட 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பெண், மூதாட்டி உட்பட மூன்று பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணெய் கேன்களைப் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த சூரியபிரியா (37), தனது மூன்று மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயைத் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சூரியபிரியா கூறியதாவது:

எனக்கும், எனது கணவர் ஜெகதீஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நாங்கள் குடும்பத்துடன் வசித்து வரும் வீட்டை எனது கணவர் ரூ.1.50 கோடிக்கு வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டார்.

இதையடுத்து, வீட்டை வாங்கிய நபர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்து காலி செய்யுமாறு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், எனக்கும் எனது குழந்தைகளுக்கும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, வீட்டை விற்பனை செய்த கணவர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டை மீட்டுத் தர வேண்டும் எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நிலத்தை அபகரித்ததாகப் புகார்

இதேபோல், சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி அருணாச்சலத்தின் மனைவி மூக்காயி (65), தனது கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து மூக்காயி கூறுகையில், ஏற்காடு பகுதியில் தங்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் பூர்வீக நிலத்தை உறவினர் ஒருவர் அபகரித்துக் கொண்டதாகவும், இதுகுறித்துக் கேட்டபோது நிலத்தைத் தர முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏற்காடு போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நிலத்தை இழந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே, நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

வங்கிக் கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி வேதனை

இதற்கிடையே, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தங்கதுரை (43) என்பவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தங்கதுரை கூறியதாவது:

வங்கி கடன் மூலம் மகேந்திரா பிக்கப் வாகனம் வாங்கித் தொழில் செய்து வந்தேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வாகனத்தை ரூ.5.45 லட்சத்துக்கு விற்பனை செய்தேன்.

வாகனத்தை வாங்கியவர், வங்கியில் உள்ள ரூ.5 லட்சம் கடனைத் தானே செலுத்திக் கொள்வதாகக் கூறி, மீதமுள்ள ரூ.45 ஆயிரத்தை வழங்கினார். ஆனால், அவர் வங்கிக் கடனைச் செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் தன்னிடம் வந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பின்றி, வருமானமும் இல்லாத நிலையில் வங்கிக் கடன் தொடர்பான தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, தனது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

ஒரே நாளில் வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.