இடைத்தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்: மூதாட்டிகளின் அன்பில் நெகிழ்ந்த அமைச்சர் பார்த்திபன்..
சேலம்: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சேலத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்துகளில் ஏறிய அமைச்சர் பார்த்திபன், பயணிகளுக்கு நேரடியாக இனிப்புகளை வழங்கினார். ஒவ்வொரு இருக்கையாகச் சென்று அவர் இனிப்பு வழங்கியதைப் பார்த்த பயணிகள் ஆர்வத்துடன் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு மூதாட்டிகள், அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை அன்புடன் அருகில் அழைத்த அமைச்சர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சியடைந்த மூதாட்டிகள், பாசத்துடன் அமைச்சரின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மூதாட்டிகளின் இந்த அன்பால் நெகிழ்ந்த அமைச்சர் பார்த்திபன், அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இடைத்தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு, அங்கிருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.



