ட்ரெண்டிங்

சேலத்தில் 28 புதிய பேருந்துகள்! தனியார் பேருந்து !

 

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை – அமைச்சர் பார்த்திபன்

சேலம்: சேலத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 28 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெற்றிப் பயணம் திட்டம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதற்காக புதிய பேருந்து சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், சேலம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில புதிய பேருந்துகளில் சென்சார் வசதியுடன் கூடிய கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணிகள் நின்று பயணிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில பேருந்துகளில் கதவுகள் திறப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவந்துள்ளதால், அவற்றைச் சரிசெய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட SETC பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அது தொடர்பாக விசாரித்துத் தெரிவிப்பதாகக் கூறினார்.

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களைச் சரியான விலையில் வழங்க வேண்டும் என்றும், தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துத் துறை சார்பில் உணவகங்கள் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை

வெற்றிப் பயணம் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறித்த கேள்விக்கு, தனியார் பேருந்து உரிமையாளர்களை விரைவில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இடைத்தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய அவர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி கிடைத்ததாகத் தெரிவித்தார். மேலும், அடுத்தடுத்த தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்றும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.