சேலத்தில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் கசிவு: சாயப்பட்டறைக்கு சீல்
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை – பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்
சேலம் மாநகர் குகை பகுதியில் உள்ள முள்ளுவாடி மேற்கு தெருவில் தனியார் சாயப்பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று இரவு இந்த சாயப்பட்டறையில் இருந்து ஹைட்ரோகுளோரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசித்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கசிவை கட்டுப்படுத்தினர். இதையடுத்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆசிட் கசிவு குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சாயப்பட்டறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் அந்த சாயப்பட்டறைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாயப்பட்டறையில் இருந்து திடீரென ஏற்பட்ட கசிவால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாயப்பட்டறைக்கு சீல் வைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவித்தனர்



