சட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் – பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தனிக்கவனம்
சேலம் மாநகரத்தின் 25-ஆவது காவல் ஆணையராக ஏ.ஜி.பாபு IPS இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தின் அடிப்படையில், சேலம் மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஜோசி நிர்மல் குமார் IPS சென்னைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து சென்னையில் பணியாற்றி வந்த ஏ.ஜி.பாபு, சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ.ஜி.பாபு கோப்புகளில் கையெழுத்திட்டு, தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஏ.ஜி.பாபு,
“பத்து ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாநகர காவல் துறையில் துணை ஆணையராக பணியாற்றியுள்ளேன். தற்போது சேலம் மாநகர காவல் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகரின் தற்போதைய நிலை குறித்து காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன்” என்றார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சேலம் மாநகரில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.



-SXgDfGgJfO.jpg)