“எனது பாடல்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தீங்கு என கூறுவதை ஏற்க முடியாது” – அசல் கோலார்
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்கு திரைப்படப் பாடகர் அசல் கோலார் என்கிற வசந்தகுமார் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார்.
பள்ளியில் நடைபெற்ற நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் பாடல்களையும் பாடினார். தொடர்ந்து மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசல் கோலார், நீண்ட நாட்களாக பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், நண்பர் மூலம் இந்தப் பள்ளி குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தார். தானும் அரசு பள்ளியில் படித்த மாணவர் என்பதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியதாக கூறினார்.
மேலும், தற்போது தனது தனிப்பட்ட பாடல்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும்போது பாடல்களை பாடி வருவதாகவும் தெரிவித்தார். இண்டிபெண்டன்ட் கலைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாய்ப்புகளை வழங்கி வருவதால், திறமையான பல கலைஞர்கள் வெளிவருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
தனது பாடல்களுக்கு வரவேற்பு இருப்பதைப் போல எதிர்ப்புகளும் இருப்பதாக தெரிவித்த அசல் கோலார், “எனது பாடல்கள் சமூகத்திற்கு எதிரானவை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட பார்வை. ஆனால், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எனது பாடல்கள் தீங்கு விளைவிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.



