ட்ரெண்டிங்

சேலம்-வழித்தடத்தை மீட்க கோரி விபரீத முடிவு ஆட்சியரிடம் மனு !

 

வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 6 பெண்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சேலம்: ஓமலூர் அருகே வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக கூறி, நடவடிக்கை எடுக்கக் கோரி 6 பெண்கள் குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓமலூர் கருக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா, சித்ரா, மானு, விஜயா, மீனா, வெண்ணிலா ஆகியோர் குடும்பத்துடன் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை கவனித்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் தண்ணீர் ஊற்றி அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து சண்முகப்பிரியா கூறுகையில், தாங்கள் தறி தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், வீடுகளுக்குச் செல்லும் பொதுவழித்தடத்தை அருகில் வசிக்கும் ஊர் கவுண்டர் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், குடும்பத்தினர் வெளியே செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பை எதிர்த்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசு நிலம் மற்றும் பொதுவழித்தடம் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்றி தங்களுக்கு வழித்தடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 6 பெண்களையும் போலீசார் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.