சேலம் கோட்டத்தில் 366 பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – இன்று முதல் வெற்றி பயணம் திட்டம் அமல்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், மகளிர் இலவச பயணத்தை விரிவுபடுத்தும் வெற்றி பயணம் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 போக்குவரத்துக் கழக கோட்டங்களில் இயக்கப்படும் 18,413 பேருந்துகளில், 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
இதன்மூலம் தினசரி 1 லட்சத்து 94 ஆயிரத்து 649 நடைகள் இயக்கப்பட்டு, சுமார் 84.32 லட்சம் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
சேலத்தில் இருந்து எந்தெந்த வழித்தடங்களில்?
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், மேட்டூர், கள்ளக்குறிச்சி, அரூர், ராசிபுரம், கரூர் உள்ளிட்ட அருகாமை மாவட்டங்கள் மற்றும் பகுதிகளுக்கு இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
ஒரு மாவட்டத்தில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மாவட்டத்திற்கு இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் பெண்கள்,சேலத்தில் இருந்து தர்மபுரி வரை இலவசமாக பயணம் செய்து, அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் பேருந்தில் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் கோட்டத்தில் சுமார் 1,900 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 366 சாதாரண கட்டண பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



