மது குடிக்க பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொன்ற பேரன் – சேலத்தில் அதிர்ச்சி
சேலம் கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியில், மது குடிக்க பணம் தராததால் மூதாட்டியை பேரன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (82), உடல்நல பாதிப்புடன் வசித்து வந்தார். இவரது பேரன் விஜய் (34), மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது வாங்குவதற்காக பாட்டியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த விஜய், மது வாங்க பணம் கேட்டு பழனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் இல்லை என அவர் கூறியதால் ஆத்திரமடைந்த விஜய், மூதாட்டியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், மூதாட்டி உயிரிழந்தது தெரியாமல் விஜய் மது போதையில் அங்கேயே தூங்கியுள்ளார்.
காலையில் இதனை பார்த்த உறவினர்கள், உடனடியாக கொண்டலாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மூதாட்டியை தாக்கி கொலை செய்ததாக விஜயை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



