சேலம்: ரூ.297 கோடி குப்பை எரியூட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு – 200-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
சேலம் டால்மியா போர்டு அருகே வெள்ளைக்கல் கரடு பகுதியில் 5 மாவட்டங்களின் குப்பைகளை சேகரித்து எரியூட்டும் மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களின் குப்பைகளை சேகரித்து எரியூட்டும் மையம், சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் ரூ.297 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, சேலம் மாநகராட்சி சார்பில் திட்டத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தை அளவீடு செய்து, அப்பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இன்று அப்பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் ஆய்வு மேற்கொள்ள இருந்தார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வுக்கு வருவதை கைவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அங்கு வந்தபோது, அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு திட்டம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களிடம் பேசிய மேயர் ராமச்சந்திரன், குப்பை எரியூட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அந்த தீர்மானத்தை மாநகராட்சி ஆணையாளர் அரசிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், பொதுமக்களின் போராட்டத்திற்கு தாங்கள் துணை நிற்போம் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “தங்களிடம் எந்தவித கருத்துக்கேட்பும் நடத்தாமல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் சாயப்பட்டறை அமைக்க இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது குப்பை எரியூட்டும் மையம் அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.
மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அரசு கைவிட்டு, மக்களுக்கு பயனளிக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



-SXgDfGgJfO.jpg)