ட்ரெண்டிங்

சேலத்தில் தொடங்கியது தாய்மாமன் தங்க மோதிர திட்டம் !

 

சேலம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்

முதற்கட்டமாக 25 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கல்

சேலம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், கடந்த 22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை டீன் தேவி மீனாள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 25 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் சுமார் 17,000 குழந்தைகள் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் செப்டம்பர் 27-ஆம் தேதி வரை பிறந்த குழந்தைகளில் தகுதியான 3,502 பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்க மோதிரம் வழங்கும் பணி தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 7358129149 மற்றும் 7358145378 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 22 முதல் திட்டம் தொடங்கும் நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.