அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு அரசு அல்லது வணிகர்கள் காரணமல்ல: செவ்வாய்ப்பேட்டை மளிகை சங்க தலைவர்
சேலம்: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சிலர் பூதாகரமாக பேசி வருவதாகவும், தமிழகத்திற்கு தேவையான பெரும்பாலான பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவதால், விலை உயர்வுக்கு தமிழக அரசு, மத்திய அரசு அல்லது வணிகர்களை பொறுப்பாக்க முடியாது என்றும் சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நல சங்க தலைவர் எஸ்.பி. நடராஜன் தெரிவித்தார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நல சங்க நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம், சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விஹார் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் எஸ்.பி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சினிமா மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுவது போன்று, வணிகத் துறையிலும் விதிமுறைகளை வகுத்து சிறப்பாக செயல்படும் வணிகர்களைத் தேர்வு செய்து அரசு விருதுகள் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் எஸ்.பி. நடராஜன் கூறியதாவது:
“அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக சிலர் பூதாகரமாக பேசி வருகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு தேவையான உளுந்து ஆந்திராவில் இருந்தும், துவரம் பருப்பு கர்நாடகாவில் இருந்தும், கடலைப் பயிர் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், பூண்டு மகாராஷ்டிராவில் இருந்தும் வருகிறது.
எனவே, இப்பொருட்களின் விலை உயர்வுக்கு தமிழக அரசையோ, மத்திய அரசையோ அல்லது வணிகர்களையோ முழுமையாக பொறுப்பேற்க முடியாது.
சேலம் மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் குப்பை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை குறைக்க வேண்டும் என பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம்.
மேலும், சொத்து வரி தொடர்பாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளையும் சந்தித்து மனு வழங்கியுள்ளோம். எனவே, இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும்” என்றார்.



-SXgDfGgJfO.jpg)