சேலம் பூம்புகாரில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி தொடக்கம்
புதிய வரவாக முதல்வர் விஜய் உருவம் பதித்த பொம்மை விற்பனைக்கு அறிமுகம்
சேலம்: சேலம் மாநகரில் திருவள்ளுவர் சிலை அருகே அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புதிய வரவாக முதல்வர் விஜய் உருவம் பதித்த பொம்மை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 18 சித்தர்கள் செட், கிரிவலம் செட், சோளிங்கர் செட், திருநாவுக்கரசர் செட், பஞ்சஸ்தலம் செட், மகாபாரதம் செட், அப்துல் கலாம், திருவள்ளுவர், விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
ராமர் செட், குபேரன் செட், கும்பகோணம் செட், ஆழ்வார் செட், பழக்கடை செட், காய்கறி கடை செட் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட வகையான கொலு பொம்மைகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொலு பொம்மைகளின் விலை ரூ.15 முதல் ரூ.32,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக விற்பனை நிலைய மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.



