ட்ரெண்டிங்

இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

சேலம் மாவட்டம், மல்லமூப்பன்பட்டி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 1,000- க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சியினரை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.


அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி செய்த காலம் ஒரு பொற்காலம், எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக அள்ளிக் கொடுத்தார்.முதியோர்கள் கொடுக்கும் மனுக்களைப் பரிசீலித்து பார்த்து சட்டமன்றத்தில் 50 லட்சம் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு கொடுக்கப்படுகின்ற திட்டம், ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவி, மாணவிகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று அதிகமான பள்ளிகளைத் திறந்து சிறந்த கல்விகளை கல்வி கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி தான்.

ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கின்ற நிலையை அ.தி.மு.க. தான் உருவாக்கி கொடுத்தது. சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்து சரித்திர படைத்த தலைவர் எம்.ஜி.ஆர் தான். ஏழை மக்களுக்கு என்ன தேவை உள்ளது என அறிந்து அ.தி.மு.க. அரசாங்கத்தில் தான் செய்துக் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பதில் முதன்மை மாநிலம் தமிழகம் என்று விளங்கியது. கல்வி கற்பதில் முதன்மை மாநிலம் தமிழகமென்ற நிலைக்கு வந்தது. 30 ஆண்டுகள் ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி, புரட்சி செய்து மாணவ மாணவிகள் நல்ல நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. கூலி விவசாய தொழிலாளரின் பிள்ளைகள் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம்,ஏழை மாணவர்களுக்கு கானல்நீராக இருந்தது. அதை நிறைவேற்றிக் கொடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.